Header Ads

அதிகரித்து வரும் வீதி விபத்து


இலங்கையின் தெருக்கள் முன்னெப்போதையும் விட இப்போது அதிக ஆபத்து நிறைந்தவையாக மாறி வருகின்றன. 2011 இல் வீதிவிபத்துக்களில் 2100 பேர் உயிரிழந்தனர். 2015 இல் அந்த எண்ணிக்கை 2800 ஆக உயர்ந்தது. அதாவது 33 சதவீத அதிகரிப்பு. மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதனால் வீதி விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகவே இருக்கும்.
இன்றைய நவீன தொழில்நுட்பத்துக்கும் வாகன பாதுகாப்புக்கும் மத்தியில் வாகன விபத்துகள் அதிக அளவில் இடம்பெறவே செய்கின்றன. பொதுவாக வாகன விபத்துகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. எனவே, வாகன சாரதிகள் விபத்துகளைத் தவிர்க்க வேண்டுமென்றால் விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு வாகன சாரதிகள் நான்கு விடயங்களில் தமது கவனத்தை செலுத்தவேண்டியது முக்கியம். பாதுகாப்பாக வாகனம் செலுத்துதல், பாதுகாப்பான தெருக்கள் மற்றும் பாதையோரம், குறைவான வேகம், பாதுகாப்பான வானங்கள் என்பனதான் அவை. இந்த நான்கு விடயங்களையும் வாகன சாரதி தொடர்புபட்ட ஏனைய காரணங்கள் என்ற இரண்டு வகைகளில் அடக்கி சுருக்கமாக நோக்கலாம்.
தற்போதைய புள்ளிவிபரங்களின் பிரகாரம் வாகன சாரதிகளின் தவறுதான் பெரும்பாலான வீதி விபத்துகளுக்கு பிரதான காரணமாவதாக கண்டறியப்பட்டுள்ளது. முதலில் வீதியின் கட்டமைப்பு விடயத்தில் வீதி தடுப்புகள், சமிக்ஞைகள், மிருதுவான மேற்பரப்பு என்பவற்றைக் கவனத்தில் எடுக்க வேண்டும். அடுத்து, வாகனம் செலுத்துவோருக்கான சிறந்த பயிற்சி, கூடுதலான வாகன கண்காணிப்பு , வேக அளவீட்டு கருவிகளுடன் கூடுதலான அதிகாரங்கள், கண்காணிப்பு கெமரா என்பவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். காற்றுப்பை (air bag), ஸ்திரக்கட்டுப்பாடு மற்றும் நவீன உபகரணங்களைப் பயன்படுத்துமாறு வாகனம் செலுத்துவோரை ஊக்குவிப்பதன் மூலமும் தெருக்களை பாதுகாப்பானதாக மாற்றலாம். இந்த ஏற்பாடுகள் நிச்சயமாக தெருப் பாதுகாப்புக்கு உதவி செய்யும். இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது வாகன சாரதியின் மனநிலைதான்.
வீதி விபத்துக்களைக் குறைப்பதில் வாகன சாரதியின் மனநிலையே முக்கிய பங்கு வகிக்கின்றது. பொதுவாக வீதி விபத்துகளுக்கு கவனச் சிதறல், அதிக வேகம், மது அருந்தி விட்டு வாகனம் செலுத்துதல், பொறுப்பற்ற விதத்தில் வாகனம் செலுத்துதல், சிகப்பு விளக்குகளை எரிய விடுதல் அல்லது சமிக்ஞைகளை நிறுத்திவிடுதல் என்பன காரணமாகின்றன. இவை யாவும் தவிர்க்கக் கூடியவையே. எனவே, வீதிவிபத்துகளை நாம் தவிர்க்க வேண்டுமென்றால் நாம் வாகனம் செலுத்தும் போது அதிக கவனத்துடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். வீதிவிபத்துகளைக் குறைக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் இப்போது பிரசார நடவடிக்கை ஒன்றை மேற்கொள்கிறது.

அது வரவேற்கத்தக்கதே. இன்று வாகனம் செலுத்துவோர் வீதியில் நடந்து செல்பவர்கள் குறித்து சற்றேனும் கரிசனையின்றி தாம் நினைத்தவாறெல்லாம் நடந்து கொள்ளலாம் என நினைக்கின்றனர். நேருக்கு நேர் வாகனங்கள் மோதுவதைப் பார்த்தாலே எமது வாகன சாரதிகளின் மனநிலையை நன்கு புரிந்து கொள்ளலாம். தடுப்புக்குறிகளுக்கு அருகிலும், ஆபத்தான வளைவுகளிலும் கூட அதிக வேகத்துடன் வாகனம் செலுத்துவது, முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச் செல்லுதல் போன்றன இன்று பொதுவாக காணக்கூடிய காட்சிகளாகி விட்டன. எவ்வளவு கடுமையான சட்டங்களை அமுல்படுத்தினாலும் அவர்களுடைய மனநிலையை மாற்ற முடியாது. இப்படிப்பட்ட வாகன சாரதிகளைத்தான் நாம் தெருக்களிலிருந்து அகற்ற வேண்டும். அவர்களுடைய மனநிலை மாறவில்லையென்றால் வீதி விபத்துக்கள் குறையவும் வாய்ப்பில்லை.

No comments:

Powered by Blogger.