Header Ads

தோல், முடி பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்முன்பெல்லாம் முகப்பருவுக்கு சிகிச்சை செய்து கொள்வது என்பது தேவையற்ற ஒன்றாகக் கருதப்பட்டது. சரியான மருந்து, மாத்திரைகள் இல்லாததும் அதற்கு ஒரு காரணம். ஆனால் “இந்த வயதில் வருவது தானே” என்ற எண்ணம் தான் முக்கியக் காரணம். ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ். 

மாசு மருவற்ற தோலை மையப்படுத்தி ஊடகங்களில் வரும் கவர்ச்சியான விளம்பரங்கள். தங்கள் முகத்தைப் பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இன்றைய தலைமுறையினரின் ஆசை ஆகியவை முகப்பருக்களுக்கு சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். தழும்புகள் ஏற்பட்டு விடக் கூடாது என்று பெற்றோரையும் ஒப்புக்கொள்ள வைத்துவிட்டன. 

ஆனால் எங்கு செல்வது? என்ன சிகிச்சை செய்து கொள்வது என்று தெளிவாக தெரியாத காரணத்தால் விளம்பரங்களில் பார்த்த களிம்புகள், நண்பர்கள் உபயோகிக்கும் களிம்புகள் மருந்துக் கடையில் சென்று தானாக வைத்தியம் செய்தல் என்று பல வகையிலும் தவறான தேவையற்ற சிகிச்சைகளில் சிக்கி வருகின்றனர். இதன் உச்சகட்டம் “ஸ்டீராய்டு” களிம்புகளை வாங்கி முகத்தில் பூசிக்கொள்வது தான்.

இந்தப் பழக்கம் தற்போது கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் அதிகமாகப் பரவி வருவது தான் சோகம். முதல் சில நாட்கள் முகத்தைச் செயற்கையாகப்பொலிவு பெறச் செய்யும். இந்தக் களிம்புகள் போகப் போக முகத்தில் கட்டிகள், குழிகள், தழும்புகள் என்று முகத்தை நிரந்தரமாக சிதைக்கும் தன்மை கொண்டவை.

முகப்பரு ஏற்படுத்தும் மனஉளைச்சல் மற்றும் தன்னம்பிக்கைக் குறைவு ஆகியவற்றை மறுக்க முடியாது. அதே நேரம், முகப்பருக்களுக்கு நிரந்தர தீர்வு தரும் ஐஸோட்ரெடினாயின் மாத்திரைகள் மற்றும் சில புதிய மாத்திரை மருந்துகளின் வருகையினால் முகப்பருக்களை நிரந்தரமாக குணப்படுத்தி, தழும்புகளை ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆனால் இந்த புதிய மருந்து மாத்திரைகள் சரியாகப் பயன்படுத்த ஒரு தோல் டாக்டரால் மட்டுமே முடியும். ஆகையால், முகப்பருக்களுக்கு முறையாகத் தேர்ச்சி பெற்ற தோல் டாக்டரை அணுகுவதே ஒரே தீர்வு.

பருத் தழும்பு :

பருக்கள் ஏற்பட்ட போது சரியான சிகிச்சை பெறாமல் பருத்தழும்புகளால் சீரழிக்கப்பட்ட முகங்களுக்கும் நவீன தோல் சிகிச்சை முறைகளான லேசர் முகப்பொலிவு சிகிச்சை ஆகியவை மூலம் இழந்த முக அழகைப் பெருமளவு திரும்பப் பெற முடியும். இதற்கும் தோல் டாக்டரே தீர்வு.

தற்பொழுது 20 வார தொடர் சிகிச்சையை முறைப்படி எடுத்துக் கொண்டால், பருக் களை நிரந்தரமாக குணப்படுத்த முடியும். எனவே தழும்புகள் ஏற்படும் முன்பே சிகிச்சை செய்து பருத்தழும்புகள் ஏற்படு வதை முற்றிலும் தவிர்க்கலாம்.

முடி பிரச்சினைகளுக்கு தீர்வு :

இன்றைய அவசர வாழ்க்கை முறையின் பரிசாக முடி உதிர்தல், பொடுகு, பூச்சி வெட்டு, முடி வளராமை பல்வேறு நோய்களால் நமக்கு என வேண்டிய முடிகள் பாதிக்கப்படுவது அதிகரித்தும் பெண்களுக்கு வேண்டாத இடங்களில் முடி வளர்ச்சி ஏற்பட்டு அழகு சீர்குலைவதும் அதிகமாகி கொண்டே வருவதை காண்கிறோம்.

இவை ஏற்படுத்தும் மன உளைச்சல் பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே நன்கு புரியும். முடி சம்பந்தபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண யாரை அணுகுவது? என்ற தெளிவு நன்கு படித்தவர்கள் மத்தியில் அறவே இல்லை என்றே சொல்லலாம். முடிக்கென்று தனி டாக்டர் கிடையாது. தோல் டாக்டரே முடி சம்பந்தபட்ட அனைத்து சிகிச்சைகளையும் முறையாக படித்து பட்டம் பெற்றவர். 

தற்போது முறையாக உலகத்தரம் வாய்ந்த யூ.எஸ்.எப்.டி.ஏ. அங்கீகரித்த பக்க விளைவு இல்லாத புதிய மருந்து மாத்திரைகள் முடி பிரச்சினைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் விஞ்ஞான முறைப்படி பயன்படுத்த தோல் டாக்டர்கள் அறிவுரை அவசியம். முக்கியமாக முடி வியாதிகளை சரியாக கண்டுபிடிக்கவும், காரணங் களை ஆராயவும் பயன்படும் அதிநவீன கருவிகளையும் தோல் டாக்டரால் மட்டுமே இயக்க முடியும்.

திடீர் முடி உதிர்வு :

அம்மை, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதற்கு 3 மாதங்கள் கழித்து மிக அதிக அளவில் முடி கொட்டும் வாய்ப்பு உண்டு. இது தானாகவே சரியாகி விடும். பெரும்பாலும் சிகிச்சை தேவையில்லை. இருந்தாலும் தோல் மருத்துவரின் நேரடி ஆலோசனையை பெறுவது நல்லது.


பரம்பரை வழுக்கை :

பரம்பரை வழுக்கைக்கும் இப்போது நல்ல மருந்து மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் யூ.எஸ்.எப்.டி.ஏ. என்ற அமெரிக்க அமைப்பின் முறையான அனுமதி பெற்ற, பாதுகாப்பான பக்க விளைவுகள் இல்லாதவை. இவற்றை தோல் டாக்டரின் அறிவுரையின்படி பயன்படுத்தினால் பரம்பரை வழுக்கையை ஆரம்ப நிலை யிலேயே தடுத்து விடலாம். இந்த மருந்துகளின் வருகையால் முடி மாற்று அறுவை சிகிச்சையின் தேவை குறைந்து வருகிறது.

பொடுகுத்தொல்லை :

பொடுகு என்று நாம் பொதுவாக குறிப்பிடுவது மருத்துவ அடிப்படையில் பலவகை தலை தோல் வியாதிகளால் ஏற்படும் செதில் உதிர்தலை குறிக்கும். சாதாரண பொடுகு, சொரியாசிஸ், தலை தோல் அலர்ஜி, தலை தோல் வறட்சி போன்ற காரணங்களால் பொடுகு உருவாகலாம். காரணம் தெரியாமல் பொதுவாக ஒரு எண்ணையை தேய்ப்பது பலன் தராது.

இளநரை :

முடிவேரில் இருந்து முடி உருவாகும் போது அதில் உள்ள நிற அணுக்களில் இருந்து மெலாரின் என்ற கருப்பு நிற பொருள் சேர்க்கப்படுவதால் முடி கருமையாக வளர்கிறது. இதில் பாதிப்பு ஏற்படும் போது இளநரை ஏற்படுகிறது. இதிலும் பல வகைகள் உண்டு. சில சத்து மாத்திரைகளை நீண்ட காலம் தோல் டாக்டரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

புழு வெட்டு :

வட்ட வடிவில் திடீரென்று உருவாகும் முடியற்ற இடங்களை புழுவெட்டு என்று குறிப்பிடுகிறோம். தலையிலோ, மீசை தாடியிலோ உருவாகும். சிலருக்கு தலையில் பெரும் பகுதி பாதிக்கப்படலாம். சிறிய அளவிலான புழு வெட்டுக்கள் தானாகவே சரியாக வாய்ப்பு உண்டு. நீங்களாக வெங்காயம் போன்றவற்றை தேய்க்காமல் தோல் மருத்துவரை அணுகி முறைப்படி சிகிச்சை மேற்கொண்டால் பலன் கிடைக்கும்.

ஆண்களுக்கு முகத்தில் முடி வளர்ச்சியின்மை :

தற்போது இந்த பிரச்சினைக்காக சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்களுக்கு முகத்தில் முடி வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு பரம்பரைத்தன்மை மற்றும் ஹார்மோன் பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். முறைப்படி காரணத்தை கண்டுபிடித்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் முகத்தில் முடி வளரச் செய்யலாம்.

தேவையற்ற முடிவளர்ச்சி :

இளம் பெண்களுக்கு பரம்பரையாகவோ, ஹார்மோன் பிரச்சினைகளாலோ, முகத்தில் தேவையற்ற முடிவளர்ச்சி ஏற் படுகிறது. அவர்கள் தேவையற்ற முடிகளை Waxing அல்லது Threading மூலம் அகற்றினால் சீக்கிரமே மீண்டும் இன்னும் பெரிதாக வளரும். தேவையற்ற முடிகளை நீக்க இன்றைய நவீன சிகிச்சை முறையோடு, பக்க விளைவுகள் அற்ற சிகிச்சை மற்றும் லேசர் முடி நீக்கம் அதை முறையாக செய்திட தெரிந்தவர் உங்கள் தோல் மருத்துவர் மட்டுமே. லேசர் முடிநீக்கம் திருநங்கைகளுக்கு இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு வரப்பிரசாதம். 

பச்சை அகற்றுதல் :

சிறுவயதில் ஒரு வேகத்தில் யோசிக்காமல் நெருக்கமானவர் பெயரையோ படங்களையோ பச்சை குத்திக் கொண்டவர்களுக்கு பின்பு அதுவே பெரிய தலைவலியாகி விடுகிறது. சீருடைப் பணிகளில் சேர முடி யாது. திருமண வாழ்க்கையில் விவாகரத்து வரை ஏற்படுத்தக் கூடிய சிக்கல்கள் இவற்றால் உடைந்த திருமணங்கள் பல. தற்போது அதிநவீன Q-Switched Nd YAG லேசர் மூலம் தோலுக்கு பாதிப்பு இல்லாமல் பச்சையை அகற்றலாம். இந்த லேசர் வசதி உள்ள தோல் மருத்துவமனையை அணுகினால் எளிதில் தீர்வு மனதில் நிம்மதி, வேலை வாய்ப்பில் தடையில்லை.

இது மட்டும் இல்லாமல் தோல் அலர்ஜி, சொரியாசிஸ், வெண்புள்ளி நோய்கள் என அனைத்து நோய்களுக்கும் அதிநவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. தோல் வியாதிகளா? அது சரியாகாது என்ற நிலை இப்போது இல்லை.


No comments:

Powered by Blogger.