Header Ads

சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பத் தயாராகிறது நாஸா


சூரியனுக்கு அடுத்த ஆண்டு விண்கலம் அனுப்ப, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாஸா) திட்டமிட்டுள்ளது.சூரியன் குறித்து அந்த விண்கலம் மேற்கொள்ளவிருக்கும் ஆய்வுகள் மூலம், அந்த நெருப்புக் கோளத்தைச் சுற்றியுள்ள 3 மர்மங்களுக்கு விடை கிடைக்குமா என்பதுதான் விஞ்ஞானிகளிடையே தற்போது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. எனினும், இதுவரை இல்லாத அளவு நெருக்கத்தில் சென்று, இந்த விண்கலம் சூரியன் குறித்து மேற்கொள்ளவிருக்கும் ஆய்வு, அந்த மர்ம முடிச்சுகளுக்கு விடை தருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்கிறார் நாஸா விஞ்ஞானி எரிக் கிறிஸ்டியன். இதுகுறித்து ’லைவ் சயன்ஸ்' இதழிடம் அவர் கூறுகையில், "சூரியனை நோக்கிய எங்களது முதல் ஆய்வு இது. நிலவைப் போலவோ, செவ்வாய்க் கிரகத்தைப் போலவோ இந்த ஆய்வில் சூரியனின் மேற்பரப்புக்குச் சென்று எங்களால் ஆய்வு செய்ய முடியாது என்பது உண்மைதான்.
இருந்தாலும், இதுவரை இல்லாத நெருக்கத்துக்குச் சென்று, அதாவது தகிக்கும் சூரியனை எந்த அளவுக்குத் தாங்க முடியுமோ, அவ்வளவு நெருங்கிச் சென்று எங்களது விண்கலம் ஆராய்ச்சி மேற்கொள்ளவிருக்கிறது" என்று குறிப்பிட்டார். "இந்த ஆய்வு மூலம், இதுவரை விடை காண முடியாமல் விஞ்ஞானிகள் திணறி வந்த 3 கேள்விகளுக்கு விடை கிடைக்கக் கூடும்.
சூரியனின் மேற்பரப்பை விட அதன் வளிமண்டலம் எவ்வாறு பன்மடங்கு வெப்பத்துடன் காணப்படுகிறது? சூரியனின் மேற்பரப்பில் தொடர்ந்து ஏற்படும் அக்கினிப் புயலைத் தூண்டுவது எது? விண்வெளியில் மிதக்கும் விண்கலங்கள், விண்வெளி வீரர்கள் ஆகியோருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த துகள்களை சூரியன் அவ்வப்போது வெளியிடுவது எப்படி? இத்தகைய கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியாமல் இருந்து வந்தது. எங்களது ஆய்வின் மூலம், இவற்றுக்கான விடை கிடைக்கும் வாய்ப்பு முன்னெப்போதையும் விட மிக அதிகமாக உள்ளது. இதற்காக, 1,370 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தையும் தாங்கக் கூடிய திறனை விண்கலத்துக்குத் தரும் 11.4 செ.மீ. தடிமன் கொண்ட கரிமக் கலப்புப் பொருளை உருவாக்கியுள்ளோம். மேலும், வெப்பத்தால் பாதிக்கப்படக் கூடிய ஆய்வுக் கருவிகளைப் பாதுகாக்கும் வகையில், புதிய குளிரூட்டிக் குழாய்களையும் தயாரித்துள்ளோம்" என்றார் அந்த விஞ்ஞானி.
நாஸாவின் இந்தத் திட்டத்துக்கு ’சோலார் புரோப் பிளஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
3 விடை தெரியாத மர்மங்கள்:
1. குளிர் சூரியன்: சூரியனின் வளிமண்டலத்தை விட அதன் மேற்பரப்பு குளிர்ந்து காணப்படுவதுதான் விஞ்ஞானிகளுக்கே விந்தையாக இருந்து வருகிறது. சூரியன் மேற்பரப்பின் வெப்பநிலை 5,500 டிகிரி செல்ஷியஸ்தான். ஆனால் அதனைச் சுற்றிப் படர்ந்திருக்கும் வளிமண்டலத்தின் வெப்பநிலை எவ்வளவு தெரியுமா? 20 இலட்சம் டிகிரி செல்ஷியஸ்!
பூமியின் மேற்பரப்பை விட்டு உயரே செல்லச் செல்ல வெப்பம் குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும். ஆனால் சூரியனின் மேற்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பம் அதிகரிப்பது ஏன் என்பதுதான் யாருக்கும் புரியாத புதிர்!
2. சூரியப் புயல்:சூரியனிலிருந்து சக்தி வாய்ந்த துகள்பொருள்கள் அனைத்து திசைகளிலும் புயலாக வீசிக் கொண்டிருக்கின்றன.
இந்தப் புயலின் வேகம், கொஞ்ச நஞ்சமல்ல... மணிக்கு பல இலட்சம் கிலோ மீட்டர்கள்!
இவ்வளவு உக்கிரமாக வீசும் இந்தப் புயலைத் தூண்டுவது எது என்பதற்கு எந்த விஞ்ஞானியாலும் இதுவரை பதில் சொல்ல முடியவில்லை.3. மர்மக் கதிர் வீச்சு:சூரியனிலிருந்து அவ்வப்போது ஒருவகையான சக்தி வாய்ந்த கதிர் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கவனித்துள்ளனர். அந்தக் கதிர்கள் ’எக்ஸ்ரே' போன்று ஊடுருவும் தன்மை கொண்டவை. தகுந்த பாதுகாப்பு இல்லாவிட்டால், விண்வெளியில் மிதக்கும் ஆய்வுக் கலங்களுக்கும், அவற்றின் மூலம் ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானிகளுக்கும் அந்தக் கதிர்கள் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை.
இந்தக் கதிர்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது விஞ்ஞானிகளுக்கு விடை தெரியா கேள்வியாகவே இருந்து வருகிறது. நாஸா அனுப்பப் போகின்ற விண்கலம் மேற்கொள்ளவிருக்கும் ஆய்வு இந்த மர்மங்களுக்ெகல்லாம் விடையைத் தருமா? விஞ்ஞானிகளின் பெரும் எதிர்பார்ப்பு இதுவாகும்.

No comments:

Powered by Blogger.