Header Ads

தமிழ் மற்றும் முஸ்லிம் இரு சமூகங்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்: பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர்


நாட்டில் இன்று இனவாதம் என்பது மிகவும் கூர்மையடைந்து காணப்படுகின்ற சூழலில் தமிழ் மற்றும் முஸ்லிம்  இரு சமூகங்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். அதிகாரப்பகிர்வு, இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற அனைத்து விடயங்களிலும்  நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், . பிரிந்து பயணித்தால் எதனையும் பெற்றுக் கொள்ள முடியாது. என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுச் சங்க அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் 16 வது வருடாந்த பொதுக்கூட்டம் இச்சங்கத்தின் தலைவர் ஏ.எல்.எம்.யாசீன் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் நேற்று (01) இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – நாட்டில் இனவாதம் எப்போதே ஏற்பட்டு விட்டது. இனவாத ரீதியான ஆட்சியும், அழுத்தங்களும் எங்கள் மீது திணிக்கின்ற சூழ்நிலையில்தான் எமது பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் 1986ஆண்டு முஸ்லிம் சமூகத்தின் போராட்ட இயக்கமாக முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்தார்.  அக்காலப்பகுதியில் பெரும்பான்மைக் கட்சியின்  அமைச்சர்களாக இருந்த அப்துல் மஜீத், ஏ.ஆர். மன்சூர் போன்றவர்கள் கூட எங்களுக்கென்ற இன ரீதியான கட்சி அவசியம் என்பதனை உணர்ந்ததன் காரணமாக தங்களுடைய இருப்புக்கு ஆபத்து வந்தாலும் கூட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை ஆதரித்தார்கள் அப்போது இனவாதம் இருந்தாலும் கூட கூர்மையடையவில்லை.
இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில் இனவாதம் கூர்மையடைந்து மிகக் கடும்போக்குவாத ஆட்சி அதிகாரப் பரப்புக்குள்ளே இருக்கின்ற சூழலிலேதான் எங்களுடைய கௌரவத்தையும், மானத்தையும், இருப்புக்களையும் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பத்தில் இருக்கின்றோம். இந்த நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்தவர்களில் தமிழ், முஸ்லிம்  மக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இன்று முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய ஆட்சியின் பங்காளியாக இருந்து அபிவிருத்தி வேலைகளைக் காட்டுகின்ற பலத்தைவிடவும் பலமடங்கு முஸ்லிம் சமூகத்தின் உரிமை குறித்த பிரச்சினைகளுக்கான நிரந்தரமான தீர்வினைக் காண்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றது.
முஸ்லிம் சமூகதத்தின் உரிமைப் போராட்டத்தின் முதுகெலும்பாக முஸ்லிம் காங்கிரஸ் எல்லாக் காலங்களிலும் மிகவும் நேர்த்தியாகவும், புத்திசாதுரியத்துடன் தனது காய்நகர்த்தலை மேற்கொண்டிருந்தது. யார் என்ன சொன்னாலும் எமது சமூகத்தின் பிரச்சினைகளை அரசாங்கத்துடன் பேசித் தீர்ப்பதில் வன்முறையற்ற நளினமான நடைமுறையை முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாக கையாண்டுள்ளது.
நாடு இன்று முக்கிய காலகட்டத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்புத் திருத்தம், தேர்தல் முறை மாற்றம் போன்ற முக்கிய விடயங்கள் நம் முன்னுள்ள நிலையில் எமது தலைமையும், எமது கட்சியும் இந்த விடயங்களில் தெளிவாகவும், மிகப்பக்குவமாகவும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. சிறுபான்மை மக்கள் யாவரும் ஒரேயணியாக நின்று வாக்களித்ததன் காரணமாகவே நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க முடிந்தது.  தமிழ் முஸ்லிம் மக்களாகிய நாங்கள் எமது ஒற்றுமை மூலம் தான் அதிகாரப் பகிர்வின் முழுமையைப் பெறமுடியும்
எனவே, தற்போதைய சூழலில் தமிழ் மற்றும் முஸ்லிம்  இரு சமூகங்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். அப்போதுதான் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்குகின்ற சகல சவால்களையும், சதிகளையும் முறியடிக்க முடியும்.இந்நிகழ்வில்சம்மாந்துறை பிரதேச செயலாளராக கடமையாற்றி நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ள ஏ.மன்சூர், சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுச் சங்க அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் ஏ.எல்.எம்.யாசீன், செயலாளர் ஏ. சாயித்தம்பி, பொருளாளர் எம்.ரி. ராசா ஆகியோர்கள் பிரதம அதிதியினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இதில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏ.எல்.சலீம்,  நம்பிக்கையாளர் சபைத் தலைவர் கே.எம்.முஸ்தபா, மஜ்லிஸ் அஷ்ஷீரா தவிசாளர் ஐ.ஏ.ஜப்பார், அம்பாறை மாவட்ட அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் செல்லத்துரை, செயலாளர் ஏ.எல்.எம்.அமீன் உட்பட ஓய்வு பெற்ற அரச ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Powered by Blogger.